சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.பொன்முடியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆயினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.

எதிர்க்கட்சிகள் அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. தனது சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வக்கீல் ஜெகநாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இன்று இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் என்பதால் பொறுப்புடன் பேச வேண்டாமா? பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.  இது தொடர்பாக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ்,

”அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. புகார் இல்லாமலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் , அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவும் ஒரு புகார் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் நான்கைந்து வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்துப் போய்விடும்”

என்று அறிவுறுத்தி வழக்கின் விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.