சென்னை; தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், அங்கிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் நேற்று விநாடிக்கு 250 கன அடியாக இருந்த நிலையில், இன்று 500 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரிக்கு ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும், சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 250 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இன்று காலை (புதன்கிழமை ) 6 மணி நிலவரப்படி ஏரியின் மொத்த நீர் இருப்பு 24 அடியில் 23.60 அடியாக உள்ளது. நீரின் கொள்ளளவு 3,540 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 775 கன அடியாக உள்ளது. இரவு நேர மழை காரணணமாக கிருஷ்ணா நதிக்கு நீர்வரத்து 750 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால்,இன்று காலை 9 மணி அளவில் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்டு வரும் உபரிநீர் 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர் காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.