சென்னை:
கல்விக்கட்டணத்தை வசூல் செய்துவிட்டு பள்ளியை மூடப்போவதாக அறிவித்ததால் எம்ஜிஆரின் உறவினர் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை வடபழனி முருகன் கோவில் அருகில் ஜானகி ராமச்சந்திரன் மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி கடந்த பல வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 7ம் தேதியன்று பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்டது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை விடுவதற்காக பெற்றோர்கள் வந்தனர்.
ஆனால் பள்ளியின் வெளியே, ‘9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் உள்ளே வர வேண்டாம். பள்ளி விரைவில் மூடப்படவுள்ளது’ என்று போர்டில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டு பெற்றோர் அதிர்ந்தனர். அவர்களில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள், பள்ளிக்குள் சென்று பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு தங்கள் பிள்ளைகளை பள்ளிக்குள் அனுமதிக்கும்படி பெற்றோர்கள் வெளியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் வடபழனி காவல்துறையினர் அங்கு வந்து பெற்றோருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெற்றோர்கள் தரப்பில், “9ம் வகுப்பு படிக்க ரூ. 19,200 கல்விக்கட்டணம் செலுத்தி உள்ளோம். ஆனால் திடீரென பள்ளிக்கூடத்தை மூடப்போவதாக அறிவித்துள்ளார்கள்” என்று தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தார்கள்.
மேலம், “இது எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் உடன் பிறந்த தம்பி நாராயணனின் பள்ளி. அவர் இறந்த பிறகு, அவரது இளைய மகள் பானு நிர்வாகம் செய்து வருகிறார். ஆனால் அவர்களது குடும்பத்திற்குள் நடக்கும் சொத்து பிரச்சினை காரணமாக பானுவின் சகோதரர் ராஜா பள்ளி நிர்வாகத்தை தன் கையில் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு பள்ளியை முடக்கும் திட்டத்தோடு செயல்படுகிறார்.
அதே பகுதியில் ராஜா தனியாக, “ஜானகி ராமச்சந்திரன் கலாலயா” என்ற பெயரில் ஒரு பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை தனது பள்ளியான ஜானகி ராமச்சந்திரன் தனது பள்ளியில் சேர்க்க மறைமுகமாக நிர்பந்திக்கிறார்” என்று தெரிவிக்கிறார்கள்.
“தங்களுக்குள் உள்ள குடும்ப பிரச்சினையால் மாணவர்களை திண்டாட வைப்பது என்ன நியாயம்? வள்ளல் எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் இப்படி செய்யலாமா” என்றும் குமுறுகிறார்கள் பெற்றோர்கள்.