ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்திலுள்ள தன்டேவாடாவின் தக்சின் பஸ்டாரிலுள்ள இரும்புச் சுரங்கம் தொடர்பாக, என்சிஎல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மாநில அரசு.
அரசுக்கு சொந்தமான என்எம்டிசி மற்றும் சத்தீஷ்கர் மினரல் டெவலப்மென்ட் கார்பரேஷன்(சிஎம்டிசி) ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு நிறுவனம்தான் என்சிஎல்.
இந்தப் பெரிய சுரங்கம் என்சிஎல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், அங்கேப் பணிகள் எதுவும் துவங்கப்படாததால், உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சுரங்க டெவலப்பர் மற்றும் ஆபரேட்டர் ஒப்பந்தம் அதானி என்டர்பிரைஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த நோட்டீஸ் மூலம் அதானி நிறுவனத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த சுரங்கத்திற்கான கிராம சபை அனுமதி முழுமையாக வாங்கப்படவில்லை என்று மாநில அரசின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர, இந்த சுரங்கப் பணிகளுக்கு வழங்கப்பட்ட வனத்துறை அனுமதியும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.