ராய்ப்பூர்
சத்திஸ்கர் முதல்வருக்கு 19 சொகுசுக்கார்கள் அரசால் வாங்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் முதல்வராக பா ஜ க வை சேர்ந்த ரமன் சிங் பதவி வகித்து வருகிறார். இவருடைய அலுவலக உபயோகத்துக்காக அரசு 19 சொகுசுக்கார்கள் வாங்கி உள்ளது. இந்த சொகுசுக் கார்கள் அனைத்தும் பல வசதிகள் கொண்டதாகும். மிட்சுபிஷி மற்றும் பஜேரோ நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டுள்ள இந்தக் கார்கள் வாங்குவதற்கு காங்கிரஸ் உட்பட பல எதிர்கட்சிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
தற்போது வாங்கப்பட்டுள்ள அனைத்து வாகனங்களும் 004 என முடியும் எண்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு நியூமராலஜி தான் காரணம் எனவும் ரமன்சிங் நான்காம் முறையாக தேர்தலில் நிற்பதால் இது போல பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளி வந்துள்ளன.
இது குறித்து அரசுத் துறை அதிகாரி ஒருவர், “இதற்கு முன்பு முதல்வரின் வாகனங்கள் அனைத்துக்கும் 005 என முடியும் எண்கள் இருந்தன. தற்போது வாங்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு 004 என முடியும் எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் எந்த ஒரு ஜோசியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ரமன் சிங் நான்காவது முறையாக தேர்தலில் நிற்பதால் இந்த எண்கள் என்பது தவறான தகவல்” எனக் கூறி உள்ளார்.