ராய்ப்பூர்
வரும் 2022க்குள் நக்சல் தீவிரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார்.
ராய்ப்பூரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் “சங்கல்ப் சே சித்தி” என்னும் நிகழ்வு நடந்தது. இதில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் கலந்துக் கொண்டு உறையாற்றினார். முதல்வருடன் மத்திய அமைச்சர் ஜகத் பிரகாஷ் நத்தாவும் கலந்துக் கொண்டார்.
முதல்வர் தன் உரையில் குறிப்பிட்டதாவது :
”சத்தீஸ்கரை நக்சல் தீவிரவாதம் மிகவும் பயமுறுத்தி வருகிறது. நாம் அனைவரும் சேர்ந்து நக்சல்களை வரும் 2022 க்குள் அதாவது இன்னும் ஐந்தே வருடங்களில் அடியோடு ஒழிக்க உறுதி பூணுவோம். அதை முடித்தும் காட்டுவோம். அதே போல ஏழ்மை, லஞ்சம், பயங்கரவாதம், ஜாதிக் கலவரங்கள், மதக் கலவரங்கள் ஆகியவற்றையும் இன்னும் ஐந்தே வருடங்களில் அடியோடு ஒழிப்போம் என உறுதி எடுப்போம்.
என்னுடைய பதிவிக்காலம் 2018ல் முடியும் என்னும் நிலையில் நான் எதற்காக 2022 என சொல்கிறேன் என நீங்கள் ஐயுறலாம். ஆனால் நான் அடுத்த முறை முதல்வராகவில்லை என்றாலும், எனக்கு அடுத்து முதல்வராகும் நபருக்கு நான் இதில் உதவுவேன். நான் முதல்வராக இருந்தாலும் என்னை ஒரு அடிமட்ட தொண்டனாகவே எப்போதும் கருதுகிறேன். அதனால் முதல்வராக இல்லை எனினும் தொண்டனாக என் கடமையை செய்வேன்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் சுதந்திரம் அடைந்ததை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். அதே போல் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நமக்குள்ள துயரங்களில் இருந்து நாமும் சுதந்திரம் அடைவோம். அடுத்த வருடம் அக்டோபர் மாதத்துக்குள் நமது மாநிலம் வெட்டவெளியில் மலம் கழிப்போர் இல்லாத மாநிலமாகும். அதற்காக கழிவறை இல்லாத வீடுகளுக்கு அரசு உதவியுடன் கழிவறை கட்டித் தரும் திட்டம் நடை பெற்றுக் கொண்டுள்ளது.” என சத்தீஸ்கர் முதல்வர் உரையாற்றினார்.