சென்னை

மிழக அரசை எதிர்த்து தொடர்ந்து ட்விட் பதிவுகளை எழுதிவருகிறார் நடிகர்  கமல்ஹாசன். தற்போது இவரது அண்ணனும் பழம்பெரும் நடிகரும் வழக்கறிஞருமான  சாருஹாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகிரங்கமாக எச்சிரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள அந்த ஈ மெயில் கடிதத்தில் சாருஹாசன் தெரிவித்துள்ளதாவது:

“மதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு,

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றம் செய்தவராக அறிவிக்கப்பட்டவர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.  அந்த தீர்ப்பில் நீங்களோ நானோ சட்டப்படி எந்தக் குறையும் காண முடியாது.  நீங்களும், உங்கள் அமைச்சர்களும், செல்வி ஜெயலலிதா வழியில் அரசை நடத்துவோம் என்றதும், எனக்கு நீங்களும் சுமார் 60 கோடி ரூபாய் பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தப் போகிறீர்களோ அல்லது உச்சநீதிமன்றம் தவறு இழைத்ததாக கூறுகிறீர்களோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் ரூ.100 கோடி அபராதம் விதித்ததை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  அந்த அபராதத்தை உச்சநீதிமன்ற ஆணைப்படி அவர்களின் சொத்துக்களை ஏலம் விட்டு செலுத்த வேண்டும்.  அப்படி செய்யாமல் அந்த இடத்தை நினைவு இல்லம் ஆக்குவது கிரிமினல் குற்றம் ஆகும்.

மாநில அரசு நீதிமன்ற அவமதிப்பாக எந்த ஒரு சட்டத்தையோ, விதியையோ கொண்டு வந்தால் அரசு செயலர் தண்டனைக்கு உள்ளாவார் என்பதை மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மதிப்பும் மரியாதைகளுடனும்,

எஸ் சாருஹாசன்

வழக்கறிஞர்.

 

இவ்வாறு தனது கடிதத்தில்  சாருஹாசன் தெரிவித்துள்ளார்.