சிட்னி

ஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி கிரிக்கெட் வீரர்களுக்கு முதலில் நன்னடத்தை முக்கியம் எனவும் திறமை இரண்டாவது எனவும் கூறி உள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி புகழ்பெற்ற பேட்ஸ்மென் ஆவார்.    அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.    சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் அவரும் ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித்தும் கடும் சர்ச்சைக்குள்ளாகி போட்டியை விட்டு விலக்கப்பட்டது தெரிந்ததே.   இது குறித்து ஒரு இணைய தளத்துக்கு மைக்கேல் ஹஸ்ஸி  பேட்டி அளித்துள்ளார்.

அப்போது மைக்கேல் ஹஸ்ஸி, “இன்றும் உலகளவில் பல கிரிக்கெட் வீரர்கள் புகழப்பட்டு வருகின்றனர்.   இதற்கு முக்கிய காரணம் நன்னடத்தை தான்.    ஒரு விளையாட்டு வீரருக்கு முதலில் நன்னடத்தை முக்கியம் ஆகும்.  திறமை இரண்டாவதே ஆகும்.    அதாவது புகழ் பெற வேண்டும் எனில் திறமையை விட நன்னடத்தையே முக்கியம் ஆகும்.

ராகுல் டிராவிட் என்றதும் நமக்கு என்ன நினைவுக்கு வரும்.    நீங்கள் அவர் 28 முறை சதம் அடித்துள்ளார் என்றால் நான் ஏமாற்றம் அடைவேன்.    அதே நேரத்தில் அவர் புதிய பல தொழில் நுட்பத்துடன் விளையாடினார் என்றோ எந்த ஒரு கெட்ட பெயரும் அவர் எடுத்ததில்லை என்றாலோ நான் மகிழ்வேன்.   எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் அவ்வாறு தான் நினைவு கொள்ளப்பட வேண்டும்.

நான் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் போது நமது நடத்தையால் நாட்டுக்கு எந்த ஒரு அவப்பெயரும் வரக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.   தற்போதுள்ள வீரர்களிடம் அது இல்லை.   வார்னர், ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர்  விதிகளுக்கு புறம்பாக நடந்துக் கொள்வதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.   எனவே நான் நன்னடத்தை தான் முதலில் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்”  என தெரிவித்துள்ளார்.

Also read