வாங்க.. தமிழ் பழகலாம்!: என். சொக்கன்

Must read

அத்தியாயம்  :5: 
‘வா’ என்பது வேர்ச்சொல். இதைத் தன்மை, முன்னிலை, படர்க்கையில் எப்படி எழுதலாம்?
தன்மை என்றால், நான், நாம். ஆகவே, நான் வந்தேன், நாம் வந்தோம்.
முன்னிலை என்றால், நீ, நீங்கள். ஆகவே, நீ வந்தாய், நீங்கள் வந்தீர்கள்.
படர்க்கை அத்தனை சுலபமில்லை. அதில் பல வகைகள் உண்டு.
முதலில், உயர்திணை, அஃறிணை என்கிற பாகுபாடு. அந்த உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், அஃறிணையில் ஒன்றன்பால், பலவின்பால்.
5
‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பதில் ‘முதல’ என்ற சொல் எழுத்துகளைக் குறிக்கிறது. ஆக, இந்தச் சொற்றொடர் ஓர் அஃறிணையைப்பற்றியது.
அடுத்து, ஓர் எழுத்தைக் குறிக்கவில்லை, பல எழுத்துகளைக் குறிக்கிறது. ஆக, இந்தச் சொற்றொடர் பலவின்பாலைக் குறிப்பது.
ஆக, படர்க்கை, அஃறிணை, பலவின்பாலுக்கான வினைமுற்றுகளை நாம் தேடவேண்டும். அவை அ, ஆ என்கிற விகுதிகளில் முடியும்.
உதாரணமாக, ‘வா’ என்ற சொல், ‘அ’ என்ற எழுத்தில் முடிந்தால் வந்தன என்று ஆகும், ‘ஆ’ என்ற எழுத்தில் முடிந்தால் வாரா என்று ஆகும்.
மாடுகள் வந்தன
மாடுகள் வாரா (வராது)
அதுபோல, எழுத்துகள் (அகரம்) முதல. எழுத்துகள் அகரத்தை முதலாகக் கொண்டவை என்று பொருள்.
ஒரு திருக்குறள், அதில் ஒரே ஒரு சொல். அதற்குள் எத்துணை நுட்பங்கள்!
(தொடரும்)

More articles

2 COMMENTS

Latest article