புதுடெல்லி: கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டுமென பரிந்துரைத்துள்ளார் அந்த அணியின் கேப்டனாக இருந்தவரும், 2 முறை ஐபிஎல் கோப்பை வென்றவருமான கெளதம் கம்பீர்.
டெல்லி அணி நிர்ணயித்த 228 ரன்கள் இலக்கை விரட்டிய கொல்கத்தா, 210 ரன்கள் வரை எடுத்து மிரட்டியது. இப்போட்டியில் கொல்கத்தா அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கம்பீர் கூறியுள்ளதாவது, “அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். கேப்டன் தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் மற்றும் ஆண்ட்ரி ரஸல் ஆகியோருக்குப் பின்னர் களமிறங்கினால் சிறப்பு.
அதேபோன்று ராகுல் திரிபாதியையும் முன்னதாகவே களமிறக்க வேண்டும். சுனில் நரைனை முன்வரிசையில் இறக்குவதற்கு பதிலாக 8 அல்லது 9வது இடத்தில் இறங்கச் செய்யலாம். கடைசி 3 ஓவர்களை, அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் கைகளில் கொடுக்க வேண்டும்” என்றுள்ளார்.
பின்வரிசையில் களமிறங்கிய மோர்கன் 18 பந்துகளில் 44 ரன்களும், ராகுல் திரிபதி 16 பந்துகளில் 36 ரன்களையும் அடித்தனர். ஆனால், 5வது வரிசையில் இறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.