ஈரோடு: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அதிமுக ஆட்சியின் போது கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெற வில்லை. ஆகையால் தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
கடந்த மக்களவை தேர்தலின் போது திமுக சார்பில் மாநிலம் முழுவதும் 12,000த்திற்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தோம். மக்களின் கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தோம்.
மேலும் முடிந்தவரை நேரடியாக ஆட்சியர்கள் மற்ற அதிகாரிகளை சந்தித்து பிரச்னைகளை தீர்க்க முயன்றோம். நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரத்தையும் தாண்டி திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கடந்த தேர்தலில் 1.1 சதவித வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் இறந்த காரணத்தால் சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. சட்டசபையில் என்னை பார்த்து சிரித்ததற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்தவர் சசிகலா.
திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில்உள்ள வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும், கூலியை அன்றைய தினமே வழங்கவும் பரிசீலிக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் திமுக ஆட்சியில் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும் முதியோர் உதவித்தொகையை தற்போது முறையாக அனைவருக்கும் வழங்காமல் கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வரும் திமுக ஆட்சியில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பேசினார்.