மும்பை:
மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் ‘கராச்சி பேக்கரி மற்றும் கராச்சி இனிப்பு கடை’ கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
அந்த கடைக்கு அண்மையில் சென்ற அந்த பகுதி சிவசேனா தலைவர் நிதின் கந்த்கோங்கர் என்பவர், “இனிப்பு கடையில் உள்ள பெயரில் இருந்து கராச்சியை அகற்ற வேண்டும்” என கடையின் உரிமையாளரை மிரட்டியுள்ளார்.
“முழுக்க முழுக்க தீவிரவாதிகள் நிரம்பிய நாடு பாகிஸ்தான். அந்த நாட்டுடன் தொடர்புடைய எந்த பெயரையும் மும்பையில் பயன்படுத்தக்கூடாது. கராச்சி என்ற பெயரை கேட்டாலேயே எனக்கு வெறுப்பாக உள்ளது” என்று மிரட்டிய நிதின்
“கராச்சியை தவிர எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் பெற்றோர் பெயரை சூட்டினால் கூட ஆட்சேபனை இல்லை. பெயரை இன்னும் 15 நாட்களில் மாற்ற வேண்டும்” என கெடு விதித்து சென்றுள்ளார்.
இதனை அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனால் மிரண்டு போன இனிப்பு கடை உரிமையாளர், கடையின் பெயரில் உள்ள கராச்சி என்ற வார்த்தையை, தினசரி பத்திரிகைகளை கொண்டு மறைத்துள்ளார்.
ஆனால், நிதின் கருத்துக்கு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இனிப்பு கடையில் உள்ள கராச்சி என்ற பெயருக்கும், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நிதின் செய்கையில் சிவசேனாவுக்கு உடன்பாடு கிடையாது” என சஞ்சய் ராவத், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
– பா. பாரதி