சென்னை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நீதிபதிகள் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த 3 மாதங்களுக்கு மதுரை நீதி மன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் 3 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி, அடுத்த சுழற்றி மாற்றம் அக்டோபர் மாதம் 5ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அடுத்த 5ந்தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக் கும் நீதிபதிகள் மற்றும் அவர்கள் விசாரிக்கும் வழக்குகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அடங்கிய முதல் அமர்வு பொதுநலன் வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களையும்,
நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கல்வி, நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்குகளையும்,
நீதிபதி ஆர்.மகாதேவன், 2015-ல் இருந்து நிலுவையில் உள்ள இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள் மற்றும் 2014 வரையுள்ள உரிமையியல் சீராய்வு மனுக்களையும்,
நீதிபதி எம்.கோவிந்தராஜ், 2014 வரையிலான முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.
நீதிபதி ஜெ.நிஷாபானு, 2018 முதல் நிலுவையில் உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482, 407 பிரிவின் கீழ் தாக்கலான குற்றவியல் மனுக்கள், ரிட் மனுக்களையும்,
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் 2015 வரையுள்ள தொழிலாளர் மற்றும் பணித் தொடர்பான ரிட் மனுக்களையும்,
நீதிபதி என்.சேஷசாயி, 2015 முதல் தாக்கலான உரிமையில் சீராய்வு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2017 வரையுள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் மேல்முறையீடு வழக்குகள், சிபிஐ, லஞ்ச ஒழிப்பு வழக்குகளையும்,
நீதிபதி அப்துல்குத்தூஸ், மோட்டார் வாகனம், வரி, ஏற்றுமதி, இறக்குமதி, கனிமம், வனம் தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி ஆர்.தாரணி 2018 முதல் தாக்கலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் மேல்முறையீடு வழக்குகளையும் விசாரிக்கின்றனர்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களையும்,
நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி, 2016 முதலான தொழிலாளர், பணி தெடார்பான ரிட் மனுக்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களையும் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.