சென்னை :
காவிரி விவகாரத்தில் திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில்ல என்று மக்கள் நலக்கூட்டணிக் கட்சிகளான மதிமுக, சிபிஎம், சிபிஐ அறிவித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் ம.ந.கூட்டணி கட்சிகள் பங்கேற்க வலியுறுத்தப்போவதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வந்தன. ஆனால் அரசு அதற்கு முன் வரவில்லை. இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பும் அனுப்பி இருக்கிறார்.
ஆனால் பாஜக, தேமுதிக, மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து விட்டன.
ஆனால் ம.ந.கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், “ஆளும்கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட முன்வராவிட்டால் எதிர்க்கட்சியான திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட முன் வரவேண்டும்” என்று அறிவித்தார். இதுபற்றி ஸ்டாலினிடம் கேட்டபோது அது அவரது கருத்து என்று பதில் அளித்தார்.
இந்த நிலையில் செய்தியாளரைச் சந்தித்த வைகோ, “திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நாடகம். ஏமாற்று வேலை. அதில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் கலந்து கொள்ளாது என்றுதான் நான்கு கட்சி தலைவர்களும் கூடி முடிவுக்கு வந்துள்ளோம்” என்று வைகோ தெரிவித்தார்.
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, “காவிரி விவகாரம் கொளுந்து விட்டு எரிந்த போது தி.மு.க. கண்டு கொள்ளவில்லை. இப்போது திடீரென்று அனைத்துக்கட்சிக் கூட்டம் என்பது அரசியல் நாடகம்.
திருச்சி, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளோம்.. இந்த சூழ்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மற்ற கட்சிகளை பங்கேற்க வைத்து எல்லா கட்சிகளும் தி.மு.க.வை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க திமுக முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், “அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று சொல்லவில்லை. காவிரி பிரச்சினை பொதுப்பிரச்சினை என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்தை யார் கூட்டினாலும் பங்கேற்கலாம் என்ற கருத்தை மக்கள் நல கூட்டணியில் முன்வைத்தேன். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள பெரும்பான்மையில் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், 24ம் தேதி திங்கட்கிழமை ( இன்று) தனது கட்சி நிர்வாகிகளுடன்
கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய திருமாவளவன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த திமுக-விற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடம் வி.சி.க. சார்பில் வலியுறுத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான மதிமுகவின் பொதுச் செயலாளர் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். ம.ந.கூட்டணில் இருக்கும் இரு கம்யூனிஸ்டுகளும் திமுகவின் அனைத்துகட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி மூன்று கட்சிகளும் முடிவெடுத்த பிறகும், “அக்கூட்டத்தில் ம.ந.கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ள தலைவர்களிடம் வலியுறுத்தப்படும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ம.ந.கூட்டணியில் இருந்து பிரிந்து வேறு பாதையில் பயணிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.