பெங்களூரு: ஜுலை 15ம் தேதி, சந்திரயான் – 2 என்ற ஆளில்லாத விண்கலம் நிலவுக்கு செலுத்தப்படவுள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதிகாலை 2.51 மணிக்கு செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் முயற்சியை மேற்கொள்ளும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இந்த முயற்சியின் மூலம், உலகில் சிறந்த விண்வெளி ஆய்வை மேற்கொள்ளும் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணையும். ஜுலை 15ம் தேதி செலுத்தப்படும் இந்த விண்கலம், செப்டம்பர் 6ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விண்கலம் மொத்தம் 3.8 டன்கள் எடை கொண்டது மற்றும் ரூ.978 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மொத்த தொகையில், ரூ.603 கோடி விண்கலத்திற்கும், ரூ.375 கோடி ஜிஎஸ்எல்வி எம்கே-III வுக்கும் செலவாகிறது.
இந்திய விண்வெளி ஆய்வுத்துறை முன்னோடியான விக்ரம் சாராபாயின் பெயரையே, இந்த விண்கலத்தின் தரையிறங்கும் அமைப்பிற்கு சூட்டியுள்ளனர். சுற்றும் அமைப்பிற்கு பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு சமஸ்கிருத மொழியில் ஞானம் என்று பொருள்.
இந்த விண்கலத்தின் தரையிறங்கும் அமைப்பு மற்றும் சுற்றும் அமைப்பில் இந்திய தேசியக்கொடி வரையப்பட்டிருக்கும் மற்றும் சுற்றும் அமைப்பின் சக்கரத்தில், அசோக சக்கரமும் அச்சிடப்பட்டிருக்கும்.