பெங்களூரு: சந்திரயான் கால்பதித்துள்ள சந்திரயான்3 லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பகுதியில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றும், லேண்டரில் இருந்து இதுவரை 8 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
2023ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சுமார் 40 நாட்கள் தொடர் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்டு 23ந்தேதி நிலவில் கால் பதித்தது. இந்த விண்கலம் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக 23ந்தேதி மாலை 6.04மணிக்கு திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து சில மணி நேரம் கழித்து, லேண்டரின் ஒரு பகுதி கதவு திறந்து, அதனுள் இருந்த பிரக்யான் ரோவர் இயந்திரம் வெளியேற சாய்வு தளம் அமைத்தது. அதைத் தொடர்ந்து, உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கியது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை இஸ்ரோ நேற்று (25ந்தேதி) வெளியிட்டது.
இந்த நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது. இந்த ரோவர் இயந்திரம் 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது. பூமியை பொறுத்தவரையில் ஒரு நிலவு நாள் என்பது 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்கிறது.
இந்நிலையில், இஸ்ரோ இன்று (26ந்தேதி) காலை வெளியிட்ட டிவிட் பதிவில், திட்டமிடப்பட்டபடி, ரோவர் இயக்கங்கள் சரிபார்க்கப்பட்டன. ரோவர் இயந்திரம் இதுவரை சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரோவர் பேலோடுகளான LIBS மற்றும் APXS ஆகியவை இயக்கப்பட்டுள்ளன. உந்துவிசை பகுதி, லேண்டர் தொகுதி மற்றும் ரோவரில் உள்ள அனைத்து பேலோடுகளும் பெயரளவில் செயல்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.