ஆந்திர முதலவர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரும் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்ப உறுப்பினரின் தூண்டுதலின் பெயரிலேயே கொலை செய்ததாக கூறியுள்ளார்.

சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த கொலை வழக்கு விசாரணை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் அம்பத்தி ராம்பாபு ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்தும் அவரது மனைவி புவனேஸ்வரி குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசினார்.

அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, “கடந்த இரண்டரை ஆண்டுகளாக என்னை எவ்வளவோ அவமானபடுத்தி இருக்கிறார்கள் அதையெல்லாம் நான் பொறுத்துக்கொண்டேன். இன்று எனது மனைவி குறித்து திட்டமிட்டே அவமான படுத்தியிருக்கிறார்கள். இதை இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

தொடர்ந்து சந்திரபாபு நாயுடு பேச முற்பட்ட போது அவரது மைக்கை சபாநாயகர் நிறுத்தினார், இதனைத் தொடர்ந்து அவையில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, கடந்த 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதைப்போன்ற ஒரு அவமானத்தை தான் சந்தித்ததில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.

ஆந்திராவை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு தான் செய்த செயல்களை பட்டியலிட்ட அவர், அதற்காக தான் சென்று சந்தித்த உலக நாட்டுத் தலைவர்களின் பெயரையும் பட்டியலிட்டார்.

மேலும், தான் முதலமைச்சராக பதவியேற்ற பின்பு தான் சட்டசபைக்குள் காலடி எடுத்து வைப்பேன் என்று ஆவேசமாக கூறினார்.