மும்பை:
வங்கி நடவடிக்கைகளில் கணவர் தலையிட்டதால், சந்தா கோச்சாரின் தலையெழுத்தே மாறியது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பதவி வகித்த போது, வீடியோகான் நிறுவனத்துக்கும் அவரது கணவர் தீபக் கோச்சாருக்கும் தொடர்பு இருந்தது.
மனைவியின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இந்த நிறுவனத்துக்கு சாதகமாக தீபக் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விசயத்தில் வெளிப்படைத் தன்மையை தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார் கடைபிடிக்கவில்லை என் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் இயக்குனர் போர்ட்டு விளக்கம் கேட்டபோது, தனது கணவர் நிறுவனங்கள் குறித்து தமக்கு ஏதும் தெரியாது என்றும், தற்போதுதான் அது குறித்து தெரியவந்ததாகவும் சந்தா கோச்சார் விளக்கம் அளித்தார்.
ஆனால் அந்த விளக்கம் திருப்திகரமாகவும், நம்பும்படியாகவும் இல்லை என்று இயக்குனர் போர்டு தெரிவித்தது.
இதனையடுத்து, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பிஎன் கிருஷ்ணா தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்க இயக்குனர் போர்ட்டு பரிந்துரைத்தது.
விசாரணை குழுவின் அறிக்கை தாக்கலாகும் முன்பு தன் பதவியை சந்தா கோச்சார் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா பணி நீக்கமாக பின்னர் மாற்றப்பட்டது. அவரது பணிக்கு பிந்தைய பலன்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.