சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழக முழு அதும் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது குறிப்பாக வட உள்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.  அதே வேளையில், கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது

இன்று முதல் 11 ஆம் தேதி  வரை தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி முதல் 6 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் எனவும், நாளை  முதல் 11-ந் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.