டெல்லி: வட தமிழகத்தில் வரும் 21,22 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசை யில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 ஆம் தேதி வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாடு – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அப்போது பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைவரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழையும், 20 ஆம் தேதி கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளடன், வட தமிழகத்தில் வரும் 21,22 ஆம் தேதிகளில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் ,தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.