சென்னை: தென் தமிழகத்தில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையொட்டி, 2023 டிசம்பரில் பேய் மழை கொட்டியது. டிசம்பர் முதல்வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த நிலையில், டிசம்பர் 3வது வாரத்தில் தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்கள் கடுமையான இழப்பை எதிர்கொண்டன. இந்த பேரிழிவில் இருந்து தற்போதுதான் பொதுமக்கள் மீண்டு வரும் நிலையில், மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பான வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 16.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை (17ந்தேதி) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
18.01.2024 மற்றும் 19.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20.01.2024 மற்றும் 21.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‘