சென்னை:  தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புறநகரில் மிதமானது முதல் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை  வானிலை ஆய்வுமையம்  தெரிவித்துள்ளது. அதுபோல பிரதீப் ஜான் உள்பட தனியார் வானிலை ஆய்வாளர்களும் மழை குறித்து கணித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  20 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் பருவக்காற்று காரணமாக மழை பெய்யப் போகிறது … நாளை நவம்பர் 11 செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழையும் கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் சற்றே கனமழையும் பெய்ய வாய்ப்பு  இருக்கிறது.

நாளை ஒரு நாள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை எதிர்பார்க்கலாம். பிறகு தென் மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிககனமழை வரை பெய்யக்கூடும்.. நாளை கடலூர் முதல் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம் இடைப்பட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யக்கூடும் இதற்கு முக்கியமான காரணமாக வறண்ட காற்றும் ஈரப்பதக் காற்றும் சந்திப்பதால் வலுவான மழை மேகங்கள் கடலோரப் பகுதிகளில் உருவாகும்…

இந்த வாரம் அதிகம் மழை எதிர்பார்க்கக் கூடிய மாவட்டங்கள்..

விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ,தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை எதிர்பார்க்கலாம்… அடுத்த சில நாட்களுக்கு தென் மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்திடும்..

மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான கோயம்புத்தூர் முதல் கன்னியாகுமரி இடைப்பட்ட பகுதிகளில் பரவலாக மிதமான முதல் சில இடங்களில் சற்றே கனமழை பெய்ய வாய்ப்பு…

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இந்த வாரம் ஒரு சில நாட்கள் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த வாரம் 17ம் தேதி முதல் பரவலான இடங்களில் பருவ காற்று காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் 

மழை தொடர்பாக,  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில், தென் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நல்ல மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தை பொறுத்தவரை கிழக்கத்திய சலனம் மிகவும் வலுவற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அல்லது நாளை மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.,

டெல்டா மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி கடலோரப் பகுதிகள் வரை நாளைய தினம் மழை பெய்யலாம். நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்து விட்டு, அப்படியே குறைய தொடங்கிவிடும். மீண்டும் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதுவரை காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது வட தமிழகத்தில் மையம் கொண்டிருந்தாலும் பரவலாக மழை கிடைக்க வாய்ப்பிருப்பது தெரிகிறது. இன்றைய தினம் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் பெரிய சம்பவம் காத்திருக்கிறது. தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

கோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதுதவிர திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கும். அதன்பிறகு வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த  நிலையில் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள தகவல்கள் கவனம் பெற்றிருக்கின்றன. இன்றைய தினம் வானம் மேகமூட்டமாக இருக்கும். வடக்கத்திய வாடைக் காற்றின் தாக்கம் ஏற்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று இரவு மழை பெய்யக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு டெல்டா வெதர்மேன் அறிவுறுத்தல்

வடக்கு கடலோர, காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் விவசாயப் பணிகளை ஒத்தி வைக்க வேண்டும்.

உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்தல் போன்ற செயல்பாடுகள் தற்போதைக்கு வேண்டாம்.

நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை சற்று ஓய்வில் இருக்கும். இந்த இடைவெளியை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

வட தமிழகத்தில் வரும் 13ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் வறண்ட வானிலையாக காணப்படும்.

மீனவர்களுக்கு தற்போதைக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.