சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியானது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும், இதன் காரணமாக, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில்வ காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, அதற்கடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டரில் காற்று வீச வாய்ப்புள்ளது. குறிப்பிக தெற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்.
இதன் காரணமாக, நெல்லை தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 2–ந்தேதி முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால், சென்னை,வேலூர், சேலம் தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்சமாக வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.