சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம் தென்மேற்கு பருவமழைக் காலம் முன்கூட்டிய தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடியும். ஆனால், இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை அந்தமான் நிக்கோபர் தீவுகளில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியிலும் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.