சென்னை : டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) மற்றும் டிசம்பர் 26ந்தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுபோல தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்ட கடலோரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் டிச.25 இரவு, டிச.26 காலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24 ஆம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை டிசம்பர் 24 – வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 25 – தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 26 – தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றும், நாளையும் ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 25-ல் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 24, 25-ல் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று” அறிவுறுத்தப்படுகிறார்கள்.