சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.30ஆம் தேதி கரையை கடக்கும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானும் உறுதிப் படுத்தி உள்ளார்.

இதன் காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் நாளை முதல் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது இன்று மாலை புயலாக உருமாற உள்ளது. இதற்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஃபெங்கல் புயல் சென்னை – பரங்கிப்பேட்டை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது  பெங்கல்  புயல் நவம்பர் 30ஆம் தேதி வாக்கில் பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக் கூடும். இதனால் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று  முற்பகல்  விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில்,  தனியார் வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்து உள்ளார்.

இன்று (நவம்பர் 28-ம் தேதி)  சென்னைக்கு மிதமான மழை – வடக்கு நகர்வு

நவ.29 – சென்னைக்கு கன மழை – மேற்கு நகர்வு

30-ம் தேதி – சென்னைக்கு மிக கனமழை முதல் அதி கனமழை – மேற்கு நகர்வு

டிசம்பர் 1- சென்னைக்கு மிதமான மழை

டிச.2 – சென்னைக்கு மிதமான மழை

புயல் / காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்த பிறகு ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளுக்கு மழை கிடைக்கும்’ என தெரிவித்துள்ளார்.