சென்னை:
தமிழகத்தின் கோவை, நீலகிரி, சேலம் உள்பட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.
இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதனமாது முதல் கனமழை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வருகிற 5-ந்தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும்,பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்தமான் தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.