சென்னை: வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்; இதனால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் புயலுக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டில் வரும் 10, 11, 12ந்தேதி கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை அறிவிப்புகள் தெரிவத்திருந்தன. இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் நவம்பர் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் புயலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. 11,12-ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறியது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வரும் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வரக்கூடும்.” என்று கூறப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு கனமழை: இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.