சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3 மணி நேரம் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரவேண்டிய காலக்கட்டத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், புதுமையாக மார்கழி மாதத்தைத் தொடர்ந்து, தை மாதத்திலும் பருவமழை பெய்து வருகிறது. தொடர்ந்து நிலவி வரும் கிழக்கு திசைக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஆளுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தைப்பொங்கலையும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று பிற்பகல் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை வரும் 19 ஆம் தேதி முதல் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.