ஓவல் :
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில் தற்போதைய சாம்பியன் இந்தியா உட்பட எட்டு அணிகள் களமிறங்கின.
தொடரை நடத்தும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட ஆறு அணிகள் வெளியேறிவிட்டன. இதையடுத்து, லண்டன் ஒவல் மைதானத்தில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் விளையாட்டு உலகின் ‘பரம எதிரிகள்’ என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
தகுதிச் சுற்றின் மூன்று போட்டிகள் , அரையிறுதி என மொத்தம் 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இந்த அணிக்கு ஷிகர் தவான் – ரோகித் சர்மா) ஜோடி சிறப்பான துவக்கம் தந்து வருகிறது. இருவரும் தலா ஒரு சதம், 2 அரைசதம் அடித்துள்ளனர். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் மதிப்புக்குரிய ரன்களை குவிப்பதால், அடுத்து வரும் வீரர்களின் டென்சன் இல்லாமல் விளையாடி ரன் சேர்க்க முடிகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டன் கோஹ்லி இதுவரை 3 அரைசதம் உட்பட 253 ரன்கள் குவித்துள்ளார். தவிர, ‘சேஸ்’ மன்னன் என்ற பெயருக்கு ஏற்ப, தென் ஆப்ரிக்கா (76), வங்கதேசத்துக்கு (96) எதிராக இந்திய அணியை வெற்றிக்கோட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இன்னொரு சிறந்த வீரரான யுவராஜ் சிங், 300 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற உற்சாகத்தில் உள்ளார். லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 ரன்கள் குவித்து, போட்டி இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
அதே போல இத்தொடரில் சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனை தந்து அணியின் வெற்றிக்கு கைகொடுக்கிறார் தோனி.
பந்து வீச்சில் எதிர்பார்த்தபடியே வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் (6 விக்.,), பும்ரா (4) கூட்டணி எதிரணியை மிரட்டி வருகிறது.
‘சுழலில்’ ஜடேஜா (4 விக்.,) நம்பிக்கை தருகிறார். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு எதிரான முதல் தோல்விக்குப் பின், அந்த அணி எழுச்சியுடன் விளையாடத் துவங்கியது. அடுத்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
அசார் அலி, பகர் ஜமான் ஆகியோர் வலுவான துவக்கம் அளிக்கிறார்கள். ‘மிடில் ஆர்டரில்’ முகமது ஹபீஸ், சோயப் மாலிக் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். கேப்டன் சர்பராஸ் அகமது சிறப்பாக செயல்படுகிறார்.
இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஜுனைடு கான் (7), முகமது ஆமிர் (2) கூட்டணி, சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் சுழல் பந்து வீச்சில் இமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோர் ஜொலிக்கிறார்கள்.
லீக் சுற்றில் இந்திய அணி 319/3 ரன்கள் குவித்தது. ஆனால் , பாகிஸ்தான் 164/10 ரன்னுக்கு சுருண்டது.
ஆகவே இந்திய அணி இன்று முழு நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெறும் என்பது இந்திய கிரிக்கெட் வீரர்களின் நம்பிக்கை.