நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரனை முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவினர் தேர்ந்தெடுத்தனர்.
கடந்த 2 ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் 10 நாட்களுக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க சம்பாய் சோரனுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது இதில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டு வாக்களித்தார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தம் 47 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றிபெற்றுள்ளது.