டில்லி

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வரும் புலம் பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுதலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது.   இதையொட்டி நாட்டில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.  பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து பணி புரியும் தொழிலாளர்கள் பணி இழந்தனர்.   கொரோனா பரவுதல் கட்டுக்கு வராததால் மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதனால் பணம், போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.  பலர் நடந்தே சொந்த ஊருக்குச் செல்ல தொடங்கினர்.  பலர் செல்லும் வழியில் பட்டினி, விபத்துக்கள் போன்றவற்றால் உயிர் இழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.   இதனால்  மத்திய அரசு இவர்கள் நடந்து பயணம் செய்யத் தடை விதித்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு இட்டது.

ஆயினும் புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் தங்குமிடம், உணவு இல்லாமல் வாடியதால் உத்தரவை மீறி நடந்தே செல்லத் தொடங்கினர்.  அதையொட்டி தற்போதைய ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஷார்மிக் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.   இதில் சுமார் 40 ல்ட்ச்ம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

அதே வேளையில் இன்னும் பலர் ரயிலில் செல்ல முடியாமல் நடந்து செல்லும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.  இதையொட்டி உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு ஒன்றைப் பதிந்து இன்று விசாரணையை தொடங்கியது.    இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக்பூஷன்,சஞ்சய் கிஷன்கவுல், எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துள்ளது.

இந்த விசாரணையின் போது அமர்வு, ”புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.  ஆயினும் அந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாமலும் சில குறைகளுடனும் இருந்துள்ளன.  இந்த நிலையை சீர் செய்யத் தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக எடுத்தாக வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் பயணத்தின் போது உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் தவித்துள்ளனர்.    அவர்களும் சமுதாயத்தின் ஒரு பகுதியினர் என்பதையும் அவர்கள் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளதையும் மறந்து விடக்கூடாது.   புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது