டெல்லி:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறுகையில்,‘‘அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. தமிழகத்தில் யார் முதல்வராக இருந்தாலும் மத்திய அரசு ஆதரவு அளிக்கும். அங்கு நிலையான ஆட்சி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது. முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டியது அதிமுக.வின் உட்கட்ச விவகாரம்’’ என்றார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,‘‘ அங்கு கூட்டணியில் ஒரு மித்த கருத்து இல்லாதது உண்மை தான். எனினும் அரசில் பங்கு வகிக்கும் கூட்டணி கட்சிகள் வெளியில் பேசும் போது கவனமாக பேச வேண்டும்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில்,‘‘ அங்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் கூட்டணி அமையலாம். அமையாமல் போகலாம். இது இயல்பு. எனினும் ஒருவரையொருவர் தாக்கி பேசுகையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’’ என்றார்.
காங்கிரஸ் கட்சி குறித்து அவர் கூறுகையில்,‘‘ பஞ்சாயத்து முதல் நாடாளுமன்ற வரை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது உச்தேச கட்சியாக மாறிவிட்டது. சட்டமன்ற தேர்தல்களில் பாஜ முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதனால் எந்த கட்சியின் உதவியும் பாஜவுக்கு தேவைப்படாது’’ என்றார்.
மகாராஷ்டிராவில் இடைத்தேர்தலுக்கான வாய்ப்பு உள்ளது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜ கூட்டணி அமைக்குமா என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு நாயுடு பதில் கூறுகையில்,‘‘ சரத்பவார் புத்திசாலி. எங்கள் கட்சியில் அதிக புத்திசாலிகள் இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘ தேசிய அளவில் பாஜ பெரிய கட்சி. கட்சியை வலுப்படுத்தவும், விஸ்தரிப்பு செய்ய வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. மோடி இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய வேண்டும். நாட்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்க பாஜவுக்கு மேலும் 15 ஆண்டுகள் தேவைப்படும். வறுமை, பசி, கல்லாமை, சமத்துவமின்மை, ஊழல் ஆகியவை இல்லாமல் செய்ய வேண்டும்’’ என்றார்.