சண்டிகர்: வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், அரியானாவில் பாஜக கூட்டணிக்கு ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூட்டணி கட்சியான ஜேஜேபி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓயவில்லை. மத்திய அரசின் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

இந் நிலையில் ஜனநாயக ஜனதா கட்சி தலைவரும், அரியானா துணை முதலமைச்சருமான துஷ்யந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார். அதற்கு முன்னதாக துஷ்யந்தை சந்தித்த அக்கட்சியின் எம்எல்ஏ ஜோகி ராம்சிகாக், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற தங்களின் உணர்வுகளை துஷ்யந்திடம் தெரிவித்துள்ளதாக கூறி இருக்கிறார்.

அமித் ஷாவை சந்திக்கும் முன்னதாக பண்ணை வீட்டில் தமது கட்சி எம்எல்ஏக்களுடன் துஷ்யந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார். இது குறித்து பேசிய அக்கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான ராம்குமார் கவுதம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களின் உணர்வுகள் உள்ளன. எனவே அடுத்து வரக்கூடிய நாட்களில் இந்த விவகாரம், பாஜக, ஜேஜேபி கூட்டணியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

2019ம் ஆண்டு தேர்தலில் 90 பேர் கொண்ட அரியானா சட்டசபையில் 40 இடங்களை பாஜக வென்றது.  ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்கள் மற்றும் பல சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.