டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணை விலை உயர்ந்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை மத்தியஅரசு கண்காணித்து வருகிறது. இதுகுறித்து மத்திய கேபினட் ஆலோசித்து முடிவு செய்யும் என்றும் மத்திய இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார். அவரது பேச்சில், இந்தியாவில் இன்னும் சில நாட்களில் பெட்ரோல் டீசல் உயர்த்தப்படுவது உறுதியாகி உள்ளது.
மராட்டிய வர்த்தகம் தொழில் மற்றும் வேளாண்மை சங்கத்தின் கூட்டம் புனேவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணையமைச்சர் பகவத் காரத் கலந்துகொண்டார்.
பின்னர் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், ரஷ்யா, உக்ரைன் போர் சூழல், மற்றும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலையை மத்தியஅரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய அமைச்ச்ர, சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணை விலை உயர்வு எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பது குறித்து மத்தியஅரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் மக்கள் எந்த பாதிப்பையும் சந்தித்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் உள்ளது என்று தெரிவித்தவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து கருத்து தெரிவிப்பது கடினம் என்று தெரிவத்துள்ளார். மேலும், எரிபொருள் விலை உயர்வு குறித்து, மூத்த அமைச்சர்கள் அடங்கிய மத்திய அமைச்சரவை முடிவு செய்யும் என்றும் அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் தகவல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட உள்ளது நிரூபணமாகி உள்ளது.
தொடர்ந்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து விமர்சித்தவர், மாநில அரசு அறிவிப்புகளை வெளியிடுவதிலும் முடிவுகளை வழங்காமல் இருப்பதிலும் திறமையானது என்று கூறியதுடன், “வணிகம் மற்றும் கல்வித் துறைகளுக்கு அவர்கள் எந்த சிறப்பு சலுகையும் வழங்கவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு எந்த வசதியும் இல்லை. பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த உறுதியான திட்டம் எதுவும் இல்லை,”
“மாநில அரசு விவசாயிகளுக்கு அவர்களின் பண்ணைகளுக்குச் சென்று பண உதவி செய்வதாக உறுதியளித்தது, அந்த அறிவிப்பு என்ன ஆனது? தீபாவளியின் போது, எரிபொருளுக்கான வரியை ரூ. 5-ரூ. 10 வரை மத்திய அரசு குறைத்துள்ளது. மாநிலங்களும் இதே போன்ற வரிகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்தாலும், மகாராஷ்டிரா எந்த தள்ளுபடியையும் கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.