டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், மேலும் அமெரிக்க தயாரிப்பான ஃபைஸர், மாடர்னா உள்பட பல நாடுகளின் தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்று பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் இந்தியா மீண்டும் 2-வது இடத்துக்கு வந்துள்ளது. தினசரி 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்குகள் என பல மாநிலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னொரு பக்கம் கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் கொண்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (இணைநோய் இல்லாதோருக்கும்) தடுப்பூசி வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 10.45 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான டோஸ்களை ஏற்றுமதி செய்து வருகிறது. தடுப்பூசி தயாரிப்புக்கு இந்திய அரசு நிதிஉதவி வழங்க வேண்டும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்தியஅரசு அதை கொடுக்காத நிலையில், தடுப்பூசி தயாரிப்பிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், பல மாநிலங்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக இந்தியாவில் தினமும் ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், தற்போது, 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை அளித்தது. அதைத் தொடர்ந்து, இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (டி.ஜி.ஜி.ஐ) அனுமதி வழங்கியிருக்கிறது.
பொதுவாக தடுப்பூசி பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, பயனர்களுக்கு பல கட்ட சோதனைகளை நடத்தப்பட்டு, அதில் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுகிறதா என்பது குறித்த ஆய்வறிக்கை கொடுத்த பிறகே, அந்த தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (டி.ஜி.ஜி.ஐ) அனுமதி வழங்கும். இதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்கள் முதல் ஓராண்டுகளை வரை தேவைப்படும். மேலும் மக்களின் தேவைக்கேற்ப அதிகளவில் தடுப்பூசிகள் தயாரிக்கக் கூடுதல் நேரம் தேவைப்படும். ஆனால் பெருந்தொற்று காரணமாக கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளிநாடுகளின் தடுப்பூசிகளை பயன்படுத்த மத்தியஅரசு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், இந்தியாவில், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு (who) அனுமதி வழங்கியுள்ள பல நாடுகளின் தடுப்பூசிகளுக்கு இந்தியா அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், உள்நாட்டு தடுப்பூசி திட்டத்தின் வேகத்தையும் கவரேஜையும் விரைவுபடுத்துவதற்கும் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளின் குறித்து கடந்த 11 ஆம் தேதி நிதியோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், (சுகாதாரம்) தலைமையில் நடைபெற்ற COVID-19 (NEGVAC)க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் 23 வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் வெளிநாட்டு தயாரிப்புகளில் உலக சுகாதார மையம் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள தடுப்பூசிகளை, இந்தியாவில் பயன்பாட்டிற்கு அவசர ஒப்புதல் வழங்குவது குறித்து NEGVAC ஆலோசிக்கப்பட்டதாகவும், அதன்படி, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனைகளின் இரண்டாவது அட்டவணையின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிகளின்படி உள்ளூர் மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வெளிநாட்டு தடுப்பூசிகளின் சோதனை, முதல் 100 பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு விளைவுகளுக்காக 7 நாட்கள் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த NEGVAC இன் பரிந்துரையை உரிய பரிசீலனைக்குப் பிறகு, மத்திரஅரசு ஏற்றுக்கொண்டது.
இந்த முடிவு இந்தியாவால் இதுபோன்ற வெளிநாட்டு தடுப்பூசிகளை விரைவாக அணுகுவதற்கும், மொத்த மருந்துப் பொருள்களின் இறக்குமதி, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கும் பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, ஏற்கனவே உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களின் 2 டோஸ் தடுப்பூசிகள், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு டோஸ் தடுப்பூசி உள்பட மேலும் பல தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
இதுமட்டுமின்றி, தற்போது ஆய்வில் உள்ள இந்திய தயாரிப்பான சைடஸ் கெடிலா, பனாசியா பயோடெக், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ், Mynvax, Biological E ஆகிய நிறுவனங்களின் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பபட்டு வருகிறது.