டெல்லி: ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால், அந்தந்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும், தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
மத்தியஅரசு, சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகளை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. மத்தியஅரசின் கொள்கைகளை எதிர்க்கும் மாநில அரசு மற்றும் அரசியல் கட்சியினர்கள் மீது விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக பல மாநிலங்கள், சிபிஐ விசாரணைக்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து இருப்பதுடன், மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்றால், மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு டெல்லி மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பில், டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் பிரிவு 6ன் கீழ் மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ அந்த மாநிலத்திற்குள் விசாரணை நடத்த முடியாது.
மாநில அரசு இந்த 6வது பிரிவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து விட்டால், சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது.
மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகே விசாரணை நடத்த வேண்டும் என அதிரடியாக தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டில் முதன்முதலாக டெல்லி சிறப்பு காவல்சட்டப்பிரிவு 6ஐ பயன்படுத்தி, ஆந்திராவுக்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அனுமதியை அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி இதே உத்தரவை பிறப்பித்தார். தற்போது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கான பொதுவான அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.