டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31) தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை, குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. பாராளுமன்ற அறிக்கையின்படி பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி,முன்னதாக, இன்று (வியாழக்கிழமைஸ்ரீ அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் போது, ஜனாதிபதி திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்குவார். அதைத்தொடர்ந்து, நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை “பொருளாதார ஆய்வறிக்கையை” தாக்கல் செய்வார்.
தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி சனிக்கிழமை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 8வது முறையாக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பின்னர், வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) ஜனாதிபதியின் உரையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவை விவாதிக்கும்.
முன்னதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கும் என்றும், “அமர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ஜனவரி 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது” என்றும் கூறினார்.
பாராளுமன்ற அறிக்கையின்படி பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறும். மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும்.
இரண்டாவது கட்டம் மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடையும்.
“பிப்ரவரி 3, 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் விவாதங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, பதில் பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தற்காலிகமாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒரு உறுப்பினர் முன்மொழியப்பட்டு மற்றொரு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.
முன்னதாக, அமைச்சர் கிரண் ரிஜிஜு ஊடகங்களுக்கு உரையாற்றினார், அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பைக் கேட்டு, ஆக்கபூர்வமான விவாதங்களை அனுமதிக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.
மத்திய பட்ஜெட் குறித்து நம்பிக்கை தெரிவித்த ரிஜிஜு, பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு சமநிலையான மற்றும் விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். “கடந்த இரண்டு அமர்வுகளில், நாடாளுமன்றத்தில் சில ‘ஹங்காமா’ இருந்தது, இது நமது நாடாளுமன்றத்தின் மோசமான பிம்பத்தை உருவாக்கியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிற எம்.பி.க்கள் இந்த அமர்வின் போது நாடாளுமன்றத்தில் பங்கேற்று விவாதங்களை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தை நடத்த அனுமதித்தால், விவாதங்கள் எளிதாக நடக்கும், ”என்று அவர் மேலும் கூறினார்.