பெங்களூரு புறநகர் பகுதியான பொம்மசந்திரா-வில் இருந்து ஓசூர் வரையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மென்பொருள் நிறுவனங்கள் அதிகமுள்ள எலெக்ட்ரானிக் சிட்டி-யை அடுத்துள்ள பொம்மசந்திரா முதல் ஓசூர் வரையிலான சுமார் 20.5 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில் 11.7 கி.மீ. கர்நாடக மாநிலத்திலும் 8.8 கி.மீ. தமிழ்நாட்டிலும் உள்ளது.
இந்த வழித்தடம் குறித்த ஆய்வின் முடிவை அடுத்து மெட்ரோ ரயில் பணிகள் துவங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் (MoHUA) இந்த ஆய்விற்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில் சாத்தியமாகும் பட்சத்தில் இது தென்னிந்தியாவின் முதல் இரு மாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஓசூர் மற்றும் பெங்களூரைச் சுற்றியுள்ள 2000க்கும் அதிகமான சிறு – குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பொம்மசந்திரா வரை பெங்களூரின் நம்ம மெட்ரோ இயக்கப்பட்டு வரும் நிலையில் அங்கிருந்து ஓசூர் வரையிலான வழித்தடம் குறித்து ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
ஆய்வுக்கான 100 சதவீத செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், வழித்தடம் அமைக்க MoHUA உடன் இனைந்து அந்தந்த மாநிலத்திற்கான வழித்தடத்திற்கு அந்தந்த மாநிலங்கள் செலவு செய்யும் என்று கூறப்படுகிறது.
ஓசூருக்கு விமான போக்குவரத்து குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் மெட்ரோ ரயில் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு இந்த பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் இந்த ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது.