டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் தகவல்களை சேகரிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

கொரோனா வைரசின் காரணமாக மக்களிடையேயான தொடர்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சொந்த வழிகாட்டுதல்களின்படி இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

ஓடிசாவை போன்று, டெல்லி அரசும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்.பிஆர் நடவடிக்கைகளை குறைந்தது ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வலியுறுத்தி வருகிறது.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் விவேக் ஜோஷிக்கு டெல்லி அரசு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் விவரங்களை சேகரிப்பதற்காக கணக்கீட்டாளர்கள் வீடு வீடாகச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பிஆருக்கான தகவல்களை சேகரிக்க களம் இறங்குபவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும், எனவே 2 பயிற்சிகளையும் உடனடியாக ஒத்திவைக்க முடிவு எடுக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.