டெல்லி: தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் விஸ்டா திட்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், மனுதாரருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், புதிய பாராளுமன்ற கட்டிடப்பணிகளும் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனார்ல, டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில், டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மனுதார் மனு தொடர்ந்ததில் உள்நோக்கம் உள்ளது என கூறி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய பணி என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.