சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ள மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
மத்தியஅரசு நடப்பு கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிக்கு சேர நுழைவுத் தேர்வு அமல்படுத்தி உள்ளது. மேலும் மாநில பல்கலைக்கழகங்களும் நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்
இதுகுறித்து பேசிய முதல்வர், ‘மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாநிலப் பல்கலைக் கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களும் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என பீடிகை போட்டு பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட மத்திய பல்கலை. நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் முன்மொழிய செய்யப்பட்டு உள்ளதாகவும், நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது. பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும், மாநிலத்தின் கல்வி உரிமை மீது ஒன்றிய அரசின் தாக்குதல் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டார்.
பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில்கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது அல்ல. அனைத்து மாணவர்களுக்கும் இது சமமான வாய்ப்பினை வழங்கிடாது. தமிழகத்தில் 70% மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இந்த பொது நுழைவுத் தேர்வு முறை, பெரும்பான்மையானவர்களுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனால் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை குறையும். நீட் தேர்வைப் போன்றே, இதற்கும் மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும். இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு பொது நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.