டில்லி
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது இந்தியாவில் ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இந்த வயதுக்குப் பிறகு நடக்கும் திருமணங்களே செல்லும் என உள்ளது. இந்த வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு நடக்கும் திருமணங்கள் குழந்தைகள் திருமணமாகக் கருதி சட்டப்படி தண்டனை அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி, ”பெண்களுக்கு மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்யப்படுவதால் அவர்களின் படிப்பு கெடுவதுடன் உடல்நிலை பாதிப்புக்களும் உண்டாகிறது. தவிர அதிக அளவில் பிரசவ கால மரணங்கள் ஏற்படுகின்றன. ஆகவே பெண்களுக்கான குறைந்த பட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது” என அறிவித்தார்.
இது பற்றி ஆராய ஜெயா ஜெட்லியின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த டிசம்பர் மாதம் அரசிடம் அறிக்கை அளித்தது. அதில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.