அமராவதி:
ஆந்திராவில் தேர்தல் நெருங்குவதால், மத்திய அரசில் விலகி புதிய நாடகத்தை சந்திரபாபு நடத்தி வருகிறார் என்று நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான நடிகை ரோஜா குற்றம் சாட்டி உள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று தெலுங்குதேச எம்.பி.க்கள் கடந்த ஒரு வாரமாக பாராளு மன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் பாஜக அமைச்சரவையில் பங்குபெற்றிருந்த இரண்டு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
அதுபோல, தெலுங்குதேச அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரண்டு பாஜக அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
பாஜக குறித்து கருத்து தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசிய கட்சிகளை நம்பமுடியவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய முடிவு குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசில் கடந்த 4 ஆண்டு காலமாக பதவி சுகத்தை அனுபவித்து வந்தவர்கள் தற்போது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது நாடகம் என்றும், ஆந்திராவில் விரைவில் சட்டமன்ற தேர்தல், மேலும் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ளதால், மக்களை ஏமாற்றவே, மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார் என்று கூறினார்.
மேலும் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு, ஜனநாயக கூட்டணியில் இருந்து ஏன் தெலுங்கு தேசம் வெளியேறவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ள ரோஜா, இதிலிருந்தே தெரிகிறது சந்திரபாபு நடத்துவது அப்பட்டமான நாடகமென்பது.
இவ்வாறு ரோஜா கூறி உள்ளார்.