டில்லி,
மத்திய மந்திரிகள் தங்களின் செலவுக்காக பணத்தை எப்படி மாற்றுகிறார்கள்… வீட்டுக்குள்ளேயே மாற்றி கொள்கிறார்களா என்று கேள்வி விடுத்துள்ளார் ப.சிதம்பரம்.
ராகுல்காந்தி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பணம் மாற்றியதை விமர்சித்த பாரதிய ஜனதாவுக்கு ப.சசிதம்பரம் பதிலடி கொடுத்தார்.
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது,
மோடி அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது போல் 1978-ம் ஆண்டு இது போன்ற முயற்சி மேற்கொண்டு அது தோல்வி அடைந்தது.
கருப்பு பணத்தை தடுக்க வேண்டும். அது பரவக்கூடாது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கான வழி இதுவல்ல.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டுகள் என்று அறிவிக்கவில்லை. அதை மாற்றி கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்கள்.
இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். துன்பப்படுகின்றனர்.மருந்துகள், பால், பஸ் டிக்கெட் வாங்க முடியவில்லை.
மக்கள் கையில் இருப்பது 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். 86 சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. அதை முடக்கிவிட்டு மக்களுக்கு துன்பம் ஏற்படாது என்று சொல்வது வேடிக்கை.
2, 3 நாட்களாக மக்கள் மிகுந்த துன்பம் அடைந்தனர். எதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.
2012-ம் ஆண்டு மத்திய அரசின் நேர்முக வரி வாரியம் ஆராய்ந்து இந்த முயற்சியில் பலன் இல்லை. கொஞ்சம் பயன் கிடைத்தாலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய துன்பம் அதிகம் என்று ஆராய்ந்து இந்த முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று அறிக்கை தந்து இருக்கிறார்கள்.
இதை மறந்து விட்டு இந்த முயற்சியை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இது மக்களுக்கு துன்பத்தைதான் ஏற்படுத்தும்.
இந்தியாவில் 17 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் வெறும் 400 கோடிதான் கள்ள நோட்டுகள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. அதை தடுப்பதற்காக இவ்வாறு பெரிய நடவடிக்கை தேவையா?
டெல்லியில் ராகுல்காந்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரிசையில் நின்றதை பா.ஜனதா விமர்சனம் செய்து இருக்கிறது. அப்படி என்றால் மத்திய மந்திரிகள் தங்களுடைய செலவுக்கு எப்படி பணத்தை மாற்றுகிறார்கள்? அவர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே பணத்தை மாற்றுகிறார்களா?
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.