க்னோ

செய்தியாளர் ஒருவர் லக்கிம்பூர் வன்முறை குறித்து கேள்விகள் கேட்டதற்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கடும் கோபம் அடைந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மறியலின் போது கார்கள் மோதி 4 விவசாயிகள் உயிர் இழந்தனர்.  இதையொட்டி வெடித்த வன்முறையில் மேலும் 4 பேர் மரணம் அடைந்தனர்   இதனால் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.  மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

உபி அரசு இந்த வழக்கைக் கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.  இதை விசாரித்த உச்சநீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழு  வழக்கு விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டது.  நேற்று  சிறப்பு விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த சம்பவம் கவனக்குறைவால் நடைபெற்றதாகத் தெரியவில்லை என்பதால் ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா சிறையில் உள்ள தனது மகனை சந்தித்து  விட்டுத் திரும்பி வரும் போது ஒரு செய்தியாளர் ஆசிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.  இது அஜய் மிஸ்ராவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  அவர் “நீங்கள் என்ன பைத்தியமா?, திருடர்களே” எனக் கூச்சலிட்டு மைக்கை  பறிக்க முயன்றுள்ளார்.  பிறகு காவல்துறையினர் அவரை சமாதானம் செய்துள்ளனர்.