புதுடெல்லி: மின் இணைப்பு மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு, நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்குவதை தடைசெய்யும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு கேரளா தரப்பில், ராஜ்ய சபாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மீனவர்கள் தங்களின் படகை இயக்க மண்ணெண்ணெய் பயன்படுத்துவதால், மத்திய அரசின் இந்த திட்டம் அவர்களை கடுமையாக பாதிக்கும் என்று கேரள ராஜ்ய சபா உறுப்பினர் ஜோஸ் கே மணி எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு, மண்ணெண்ணெய் விநியோகத்தை ரத்துசெய்யும் மத்திய அரசின் முடிவு கேரளாவின் 85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களை பாதிக்கும். அவர்களில் முக்கியமானவர்கள் மீனவர்கள்.

மண்ணெண்ணெய் என்பது விளக்கு எரிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுகிறது என்ற புரிதலிலேயே மத்திய அரசு இந்த முன்மொழிவை வைத்துள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை 85 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மின் இணைப்பு பெற்றுள்ளார்கள். வெறும் 60,128 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மின் இணைப்போ அல்லது சமையல் எரிவாயு இணைப்போ இல்லை” என்றார்.

மற்றொரு தரப்பில், திமுகவின் திருச்சி சிவா, தமிழகத்தில் தோண்டப்படும் மீத்தேன் கிணறுகள் குறித்தப் பிரச்சினையை எழுப்பினார்.