டெல்லி:
கடந்த 2010ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் பெண்களுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை 2 குழந்தைகள் வரை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 6 மாதங்களுக்கு வழங்கக்கூடிய இந்ததிட்டம் முதல் கட்டமாக நாட்டில் மொத்தம் உள்ள 650 மாவட்டங்களில் 53 மாவட்டங்களில் பரிட்சாத்திர முறையில் அமல்படுத்தப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வகையில் கடந்த புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, ‘‘இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்ப டுத்தப்படும்’’ என்று அறிவித்தார்.
இந்த உதவித் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசுகளும் பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டது. 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 2 குழந்தைகள் வரை உதவி தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
ஆனால், 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அமல்படுத்த ரூ. 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 சதவீத பங்களிப்பு என்ற விதத்தில் தலா ரூ. 3 ஆயிரம் வீதம் மட்டுமே கணக்கீடு செய்யப்பட்டு இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
2013ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் 2.6 கோடி பேர் குழந்தைகள் பிறக்கிறது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையை கொண்டு இதில் 90 லட்சம் பேருக்கு மட்டுமே உதவித் தொகை வழங்க முடியும். மத்திய அரசு அறிவித்துள்ளபடி இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டிற்கு ரூ. 16 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும்.
இந்த நிலையில் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மத்திய அரசின் பங்களிப்பு 50 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு 50 சதவீத தொகையை வழங்க வேண்டும்.’’ என்றார்.
இந்த திட்டம் ஒரு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறதாஎன்பது குறித்து கேட்டதற்கு அவர்‘‘ இந்த திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் தான் விபரங்கள் வெளியிடப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு 90 லட்சம் பேருக்கு தான் வழங்க முடியும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய நிதியமைச்சகத்தை கேட்டுள்ளோம்’’ என்றார்.