டில்லி

பிஃபிஸர், மாடர்னா நிறுவனங்கள் மாநிலங்களுக்குத் தடுப்பூசி விற்க மறுப்பதால் மத்திய அரசு இதற்கு உதவ வேண்டும் என டில்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அதை தடுக்க தடுப்பூசி ஒன்றே வழியாக உள்ளது.  இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை அதிக அளவில் உள்ளதால் 18-44 வயதானவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.   பல மாநில அரசுகள் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய முயற்சி செய்கின்றன.

பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தடுப்பூசியை நேரடியாக விநியோகம் செய்ய மறுத்து விட்டது.  டில்லி அரசும் மாடர்னா மற்றும் பிஃபிஸர் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்ய முயன்ற நிலையில் டில்லி அரசுக்கும் நேரடியாக விநியோகம் செய்ய இரு நிறுவனங்களும் மறுத்துள்ளன.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,”அமெரிக்காவின் மாடர்னா மற்றும் ஃபிஸர் நிறுவனங்களுடன் நேரடியாகப் பேசி தடுப்பூசி கொள்முதல் செய்ய முயற்சி செய்தோம்,  அந்த நிறுவனங்கள் மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாகப் பேசி தடுப்பூசி விற்போம், மாநில அரசுகளுக்கு விற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டன.

மத்திய அரசிடம் மக்களுக்காக நான் இரு கரம் கூப்பிக் கேட்கிறேன், அரசு அந்த மருந்து நிறுவனங்களிடம் பேசி, தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், மாநிலங்களுக்கு வழங்கவும் உதவ வேண்டும்.  டில்லியில் கொரோனா 2-வதுஅலை மெல்ல அடங்கி வருகிறது. நாங்கள் மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறோம்.

சீனாவிலிருந்து இதுவரை 6 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்திருக்கிறோம். இதற்காக 3 சேமிப்பு கிடங்கு உருவாக்கி ஒவ்வொன்றிலும் 2 ஆயிரம் உருளைகளைச் சேமித்துள்ளோம்.  இவை 3-வது அலைக்குப் பயன்படும். இதற்கு இந்திய வெளியுறவுத்துறையும், சீன தூதரகமும் எங்களுக்கு உதவியதால் இது சாத்தியமாகாது” எனத் தெரிவித்துள்ளார்.