டெல்லி
தமிழகம் அதிகளவு மின்சார பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் சமிக் பத்தாச்சாரியா எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் இதற்கு பதிலளித்துள்ளார்
அவர் தனது பதிலில்,
“2032ம் ஆண்டுக்குள் நாட்டில் மொத்தம் 3,37,900 மெகாவாட் மின் உற்பத்தி திறன் சேமிக்கப்படும். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 2,14,237 மெகாவாட் (MW) மின் உற்பத்தி திறன் சேமிக்கப்பட்டுள்ளது. மொத்த உற்பத்தி திறன் மார்ச் 2014 இல் 2,48,554 மெகாவாட்டிலிருந்து 79.5 சதவீதம் அதிகரித்து ஜூன் 2024 இல் 4,46,190 மெகாவாட்டாக அதிகரித்தது, மேலும் 2032 ம் ஆண்டில் மொத்த எதிர்பார்க்கப்படும் திறன் கூடுதலாக 3,37,900 மெகாவாட்டாக இருக்கும்.
மேலும், 2032-ம் ஆண்டுக்குள் 510 மெகாவாட் சிறிய நீர்மின் திறன் சேர்க்கப்படும், மேலும் 1,43,980 மெகாவாட் சூரிய சக்தியும், 23,340 மெகாவாட் காற்றாலை மின்சாரமும் சேர்க்கப்படும்.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாடு, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு 24 மணி நேர சராசரி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த மூன்று மாநிலங்களில் கிராமப்புறங்களில் சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கி மாநிலம் எது என பார்த்தால், அதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.